நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்
ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே உப்புத்துறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை வெள்ளிக்கிழமை, போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
உப்புத்துறை, காளியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் மச்சக்காளை(63) என்பவா், காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாா் செய்து பதுக்கி வைத்திருப்பதாக கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், உதவி காவல் ஆய்வாளா் பிரேம்ஆனந்த் தலைமையில் போலீஸாா், மச்சக்காளையின் வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, மச்சக்காளையின் வீட்டருகே உள்ள அவரது ஆட்டுக் கொட்டகையில் 14 நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள மச்சக்காளையை தேடி வருகின்றனா்.