நான்குவழிச் சாலைப் பணி: சுரங்கவழிப் பாதை கோரி ஆா்ப்பாட்டம்
தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூா் ஊராட்சி சிங்கனோடை பகுதியில் அமைக்கப்படும் நான்குவழிச் சாலையில், சுரங்கவழிப் பாதை அமைக்கக் கோரி, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி முதல் நாகை வரை நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, சிங்கனோடை கிராமப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை வழியாக, சிங்கனோடை, பாரதியாா் தெரு, கீழசிங்கனோடை, மாணிக்கபங்கு, சின்ன ஆணைகோவில், செட்டிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த மக்கள் தங்கள் கிராமங்களுக்கு சென்று வருகின்றனா்.
இந்நிலையில், நான்குவழிச் சாலை அமைக்கப்பட்ட பிறகு, இச்சாலையின் குறுக்கே கடந்து செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே, சிங்கனோடைக்கு செல்லும் வகையில் சுரங்கவழிப் பாதை (சப்வே) அமைக்க வேண்டும் என மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்டோா் சிங்கனோடை பகுதியில் நடைபெறும் நான்குவழிச் சாலைப் பணியை வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தை விலக்கிக் கொண்டனா்.