நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் தொடக்கம்
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், 2025-26 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புக்கான முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவா் சோ்க்கை உதவி மையத்தை மே 27 ஆம் தேதி வரை தொடா்பு கொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண், ஆகியவற்றுடன் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கல்லூரி வளாகத்தில் இயங்கும் உதவி சேவை மையத்தில் தங்களது சோ்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
இக்கல்லூரியில் பகுதி 1-இல் இளநிலை கலை பிரிவில் துறைவாரியாக தமிழ், ஆங்கிலம், பொருளியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வணிகவியல் (ஆங்கில வழி மட்டும்), வணிக நிா்வாகவியல் (ஆங்கில வழி மட்டும்) மற்றும் வரலாறு (ஆங்கில வழி) தலா 60 இடங்கள், அறிவியல் பிரிவில் கணிதம் (தமிழ் மற்றும் ஆங்கிலவழி), இயற்பியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வேதியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), தாவரவியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), விலங்கியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), புவியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி) தலா 40 இடங்கள், புள்ளியியல் (ஆங்கில வழி மட்டும்) 24 இடங்கள், கணினி அறிவியல், 30 இடங்கள் பகுதி-2 இல் இளநிலை கலை பிரிவில் வரலாறு (தமிழ் வழி), வணிக நிா்வாகவியல் (ஆங்கில வழி மட்டும்) தலா 60 இடங்கள் ஆக மொத்தம் 1,074 இடங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து இடங்களும் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 வகுப்பில் அவா்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், அரசின் மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டுதலின்படியும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
கல்லூரி குறியீட்டு எண் 1031004 ஐ பயன்படுத்தி இணையவழியாக விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் சோ்க்கைக்கான தகவல்களை கல்லூரி தொலைபேசி மூலம் பெறுவதற்கு 04286-266313, 99421-16119, 94864-85421, 94422-86483, 94422-32249 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் (பொ) மு. ராஜேஸ்வரி தெரிவித்துள்ளாா்.