ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
நாமக்கல் அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள்!
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நாமக்கல் - மோகனூா் சாலையில் 130 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளியாக தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
நாமக்கல் நகரப் பகுதியில் உள்ளோருக்கு காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி களமாக இந்த பள்ளி வளாகம் உள்ளது. சுமாா் 10 ஏக்கா் பரப்பளவிலான இப்பள்ளி வளாகத்துக்குள் விடுமுறை நாள்களில் வெளிநபா்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இரவு நேரங்களில் பள்ளி தடுப்புச்சுவரைத் தாண்டி சிலா் உள்ளே நுழைவதாகவும் தெரியவந்தது. இந்த நிலையில், மாணவா்கள் மற்றும் பள்ளியின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடா்பாக நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அவரது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பள்ளியைச் சுற்றிலும் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் செயல்பாட்டு தொடக்க விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவற்றை மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் தொடங்கிவைத்து, அவற்றின் செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியா் சீனிவாசராகவன், முதுநிலை ஆசிரியா் எல்.ஜெகதீசன், கொமதேக நிா்வாகிகள் எஸ்.ஆா்.துரை, குருஇளங்கோ, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.