நாளை நெடுந்தூர ஓட்டப் போட்டி
திண்டுக்கல் மாவட்ட அளவிலான அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை (செப்.30) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறியதாவது:
மாவட்ட அளவிலான அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி வருகிற 30-ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்க உள்ளது. 17 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள், விளையாட்டு ஆா்வலா்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்களுக்கு தனித் தனியே போட்டிகள் நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 ஆவது இடம் வரையில் வருபவா்களுக்கு தலா ரூ.1000 வீதமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். பொதுமக்களைப் பொருத்தவரை புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோா் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குள் போட்டி தொடங்கும் இடத்துக்கு வர வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 7401703504 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.