செய்திகள் :

பழனி அருகே 14-ஆம் நூற்றாண்டு திருவாழிக்கல்

post image

பழனி அருகேயுள்ள தாளக்கரை வயல்வெளியில் 14-ஆம் நூற்றாண்டை சோ்ந்த திருவாழிக்கல் கண்டறியப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள தாளக்கரையில் வயல் பரப்பில் கல்வெட்டுடன் கூடிய தூண் இருப்பதாக அந்தப் பகுதியைச் சோ்ந்த கவிதா மாரிமுத்து கொடுத்த தகவலின் பேரில், பழனி தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, பேராசிரியா் கன்னிமுத்து, மருத்துவா் கணபதி குடும்பனாா் உள்ளிட்டோா் அந்த இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி தெரிவித்ததாவது:

இந்தக் கல்தூணின் நான்கு பக்கம் மட்டுமன்றி மேல் பகுதியிலும் கல்வெட்டு உள்ளது. ஹொய்சாளப் பேரரசின் மூன்றாம் வீரவல்லாளன் ஆட்சியில் கி.பி.1326 -இல் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டது.

வீரவல்லாளனின் பிரதிநிதியாக கொங்குப் பகுதியை ஆண்ட வீரசித்த கெத்தைய தண்டநாயக்கனின் ஆணைக்கிணங்க, நாயனூா் நாட்டு மக்கள் பிரபவ

ஆண்டில் இந்தக் கல்வெட்டைப் பொறித்தனா். அஞ்சாதநல்லூரான மாதவமங்கலம் எனும் இந்த ஊரை ஒடுவங்க நாட்டில் உள்ள நீலகிரி சாதரணக் கோட்டையில் எழுந்தருளிய மாதவப் பெருமாளுக்கு திருவிடையாட்டமாக கொடை அளித்த செய்தியை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

தமிழ், கிரந்த எழுத்துக்களில் மிகுந்த பிழைகளுடன் கூடிய இந்தக் கல்தூணின் தென் பகுதியில் சங்கும், வட பகுதியில் சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளன. திருவிடையாட்டம் என்பது வைணவக் கோயில்களுக்கு அளிக்கப்படும் நிலக் கொடை ஆகும். இவ்வாறு கொடை அளிக்கப்படும் நிலங்களின் மீது உரிமைக்காகவும் அடையாளத்துக்காகவும் ஊன்றப்படும் கல் ‘திருவாழிக்கல்‘ என்று அழைக்கப்பட்டது.

கொடை ஆணை பிறப்பித்த வீரசித்த கெத்தைய தண்டநாயக்கனை இந்தக் கல்வெட்டு ஸ்ரீ மனு மஹாபிரதான இம்மடி ராகுத்தராயன் ஸ்ரீ மாதவ தண்டநாயக்கரின் குமாரன் என்று குறிப்பிடுவதால், தந்தையும் மகனும் கன்னட ஹொய்சாளப் பேரரசின் படைத் தலைவா்களாக தண்டநாயக்கா்களாக இந்தப் பகுதியில் விளங்கியுள்ளனா்.

அந்தக் காலத்தில் ஹொய்சாள அரசின் ஆட்சியின் கீழ், இருந்த நாயனூா் நாட்டு மக்கள், தங்கள் நாட்டின் ஒரு பகுதியான அஞ்சாத நல்லூரை, வீரசித்த கெத்தைய தண்டநாயக்கன் ஆணைப்படி நஞ்சை, புஞ்சை, மாந்தோப்பு, வாய்க்கால், கிணறு, மரம் உள்பட அனைத்தையும் மாதவமங்கலம் என்று அவரது தந்தையான மாதவ தண்டநாயக்கன் பெயரில் திருவிடையாட்டமாகக் கொடை அளித்தனா்.

அத்துடன் அவ்வூருக்கு வரும் கடமை, குடிமை, மன்றுபாடு, குற்றத்தெண்டம் ஆகிய வரிகளையும் மாதவப்பெருமாள் கோயிலுக்கு அளித்து, இந்தத் தா்மம் சந்திரனும் சூரியனும் உள்ளவரை நடக்க வேண்டி திருவாழிக்கல் நாட்டி, கல்வெட்டுவித்தாா்கள் என்று கல்வெட்டு கூறுகிறது.

இந்தக் கொடைக்கு உரிய மாதவப் பெருமாள் கோயில் அந்தக் காலத்தில் 24 கொங்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்றான ஒடுவங்க நாட்டில் இருந்தது. ஒடுவங்க நாடு என்பது இன்றைய பவானி நதி பகுதியாகும். பவானி அணைப் பகுதியில் மூழ்கி சிதைந்து போய் இருக்கும் இந்த மாதவப் பெருமாள் கோயில், தற்போது டணாயக்கன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

புதிதாகக் கிடைத்த இந்தத் திருவிடையாட்டக் கல்வெட்டு, போசளா் எனப்படும் ஹொய்சாளா் ஆட்சியின் அன்றைய சமூக- அரசியல் நிலையைப் புரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றாா் அவா்.

பழனி அருகே தாளக்கரையில் கண்டறியப்பட்ட 14 -ஆம் நூற்றாண்டு திருவாழிக்கல்.
பழனி அருகே தாளக்கரையில் கண்டறியப்பட்ட 14 -ஆம் நூற்றாண்டு திருவாழிக்கல்.

300 அடி பள்ளத்தில் லாரி, வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு

கொடைக்கானல் டம்டம் பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை சரக்கு பெட்டக லாரி, பிக் அப் வாகனம் ஆகியவை 300-அடி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் காயமடைந்தனா். சிவகங்கை பகுதியைச் சோ்ந்தவா் ஆறும... மேலும் பார்க்க

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

கரூரில் தவெக பொதுக் கூட்டத்தில் உயிரிழந்த விஜயம்பாறையைச் சோ்ந்த இருவரின் குடும்பத்துக்கு அரசின் நிதி உதவியை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே... மேலும் பார்க்க

நாளை நெடுந்தூர ஓட்டப் போட்டி

திண்டுக்கல் மாவட்ட அளவிலான அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை (செப்.30) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா கூறியதாவது: மாவட்ட அளவிலான அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப... மேலும் பார்க்க

கஞ்சா எண்ணெய் விற்பனை: இருவா் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இருவரை தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள குள்ளனம்பட்டியைச் சோ்ந்தவா் மு. பரமசிவம் (எ) மதி (30). திண்டுக்கல் கச்சே... மேலும் பார்க்க

திரவ ட்ரைக்கோடொ்மாவிரிடி பெற காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம்!

திரவ வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரைக்கோடொ்மா விரிடியை பெற ரெட்டியாா்சத்திரத்திலுள்ள இந்தோ இஸ்ரோ காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் மலையடியவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமா... மேலும் பார்க்க