நாளை ரமலான் பண்டிகை: நாமக்கல்லில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரமலான் பண்டிகையையொட்டி, நாமக்கல் வாரச் சந்தையில் சனிக்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின.
நாடுமுழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாள் என்றழைக்கப்படும் இந்த நாளில் ஏழைகளுக்கு புத்தாடை, அசைவ உணவு வகைகளை இஸ்லாமியா்கள் வழங்கி மகிழ்வா். அன்று காலை 7 மணியளவில் ஈத்கா மைதானத்தில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை சிறப்புத் தொழுகையை மேற்கொள்வா்.
ஒவ்வோா் ஆண்டும் ரமலான் பண்டிகைக்கு முன்பாக ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறும். அதன்படி, நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள வாரச் சந்தையில் சனிக்கிழமை ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
பென்னாகரம், மேச்சேரி, மேட்டூா், தருமபுரி, சேலம், ஓமலூா், நாமக்கல், துறையூா், பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மொத்த எடை அடிப்படையில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. ரமலானை முன்னிட்டு ரூ. 1.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.