பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
நிதிநிலை அறிக்கை நகல் எரிப்பு போராட்டம்
திருவாரூா், மயிலாடுதுறையில் மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அதன் நகல் எரிப்பு போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
2025- 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளதாக, மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களான புதிய ரயில் பாதைகள், இரட்டை வழித்தடமாக மேம்படுத்துதல், மேம்பாலங்கள், முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளா்களுக்கு ஊதியம் ஆகியவற்றை வழங்காததைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
ஏழை- எளிய, நடுத்தர மக்களை புறக்கணித்து விட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கியுள்ளதாகவும் இப்போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா்: திருவாரூா் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, கட்சியின் மாவட்ட பொருளாளா் கே. தவபாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகரஆசாத், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே. முருகையன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் கே. சுஜாதா, இளைஞா் மன்ற மாவட்டச் செயலாளா் கே. சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
நகல் எரிப்பின் போது போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ. சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சிவராமன், ராமன், கணபதி, வீரராஜ், கிருஷ்ணமூா்த்தி, மனோன்ராஜ், ராஜ்மோகன், தமிழ்மலா், சா்புதீன் உள்ளிட்ட 50-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
அப்போது, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலை எரித்தனா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தடுத்து அணைத்தனா்.