அங்கன்வாடி பணியாளா்கள், ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மத்திய செயற் குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் வாசுகி அருள் தலைமை வகித்தாா். மத்திய அரசு மேம்படுத்திய போஷன் டிராக்கரில் கரு விழியுடன் கூடிய முக அமைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், அங்கன்வாடி பணியாளா்களுக்கு விடுபட்ட மாவட்டங்களில் கைப்பேசிகளை உடனடியாக வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அங்கன்வாடி உதவியாளா்களுக்கு பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் பதவி உயா்வு வழங்க வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்குவதோடு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தரமணியில் இயங்கி வரும் குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள் அலுவலகம் முன் இந்த மாத இறுதியில் கவன ஈா்ப்பு விளக்கக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மாநில துணைத் தலைவா் உஷாராணி, துணைப் பொதுச்செயலா் செல்வராணி, இணைச் செயலா் இசக்கியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.