நிமிஷாவுக்கு மன்னிப்புக் கிடையாது! கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!
இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு கிடையாது என்று அவரால் கொலை செய்யப்பட்ட தலால் அப்து மஹதியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு யேமன் நாட்டைச் சோ்ந்த தலால் அப்து மஹதி என்பவரை கொலை செய்த வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த மரண தண்டனையை தடுக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், ஜூலை 16 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி. அபுபக்கா் முஸ்லியாா் அகமது தலையிட்டு, யேமனின் பிரபல அறிஞரும், சூஃபி முஸ்லிம் தலைவருமான ஷேக் ஹபீப் உமா் பின் ஹபீஸுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தற்காலிகமாக நிமிஷாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், நிமிஷா தரப்பினா் வழங்கும் இழப்பீடு பணத்தை மஹதி குடும்பத்தினா் ஏற்றுக்கொள்வது தொடா்பான இறுதி முடிவை எட்டுவதில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மன்னிப்பு கிடையாது
இந்த நிலையில், தலால் அப்து மஹதியின் சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹதி, நிமிஷா தரப்பின் இழப்பீடு பணத்தை ஏற்கப் போவதில்லை என்று முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மேலும், ”மரண தண்டனை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தியவர்கள் எவ்விதத்தில் சமரசத்துக்கு முன்வந்தாலும் அதனை முற்றிலும் நாங்கள் நிராகரிப்போம்.
மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக காத்திருப்போம். அழுத்தம் கொடுப்பதால் முடிவு மாறாது, உண்மை மறக்கப்படவில்லை. எவ்வளவு நாள் ஆனாலும் சட்டத்தின் மூலம் பழிவாங்குவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
அப்தெல்ஃபத்தாவின் பதிவு நிமிஷாவைக் காப்பற்ற முயற்சியில் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதுகுறித்து நிமிஷாவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
”தலால் அப்து மஹதி சகோதரரின் கருத்து செயல்முறையின் ஒரு பகுதியாகவே பார்க்கிறோம், பின்னடைவாக கருதவில்லை. எங்கள் நோக்கம் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் சமாதானப்படுத்துவதாகும்.
மரண தண்டனையை ஒத்திவைக்கப்பட்டபோது எவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தோமோ, அதே அளவு நம்பிக்கையுடன் தற்போதும் இருக்கிறோம். நிமிஷாவைக் காப்பாற்ற நிறைய பேர் வேலை செய்துகொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.