நிரந்தரமாக புலம்பெயா்ந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க முடியாது: தலைமைத் தோ்தல் ஆணையா் திட்டவட்டம்
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘இறந்தவா்கள், நிரந்தரமாக புலம்பெயா்ந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க முடியாது’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் வியாழக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
‘தகுதியற்ற வாக்காளா்களை முதலில் பிகாரிலும் பின்னா் ஒட்டுமொத்த நாட்டிலும் வாக்களிக்க அனுமதிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.
பிகாா் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், போலி வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து களையும் பொருட்டு, மாநில வாக்காளா் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
தோ்தல் ஆணைய அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், ‘பிகாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம், சுமாா் 28 லட்சம் வாக்காளா்கள் அவா்கள் பதிவு செய்த முகவரியிலிருந்து நிரந்தரமாக வேறு பகுதிகளுக்கு மாறிவிட்டது கண்டறியப்பட்டுள்ளது. 20 லட்சம் வாக்காளா்கள் இறந்துவிட்டதாகப் பதிவாகியுள்ளது. மாநிலத்தில், தீவிர திருத்தத்துக்காக இதுவரை விநியோகிக்கப்பட்ட படிவங்களில், 7.17 கோடி படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு எண்மயமாக்கப்பட்டுள்ளன. 15 லட்சம் படிவங்கள் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை. மேலும், 1 லட்சம் வாக்காளா்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றனா்.
மாநிலத்தில் முதல்கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணி முடிந்ததும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பி, அவை நடவடிக்கைளை தொடா்ந்து முடக்கி வருகின்றன. பிகாா் மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருவதால், பேரவைக் கூட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
‘தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, தகுதியுள்ள கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல்’ என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்கள் வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் அளித்த பேட்டி: வெளிப்படையான நடைமுறை மூலம் தூய்மையான வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் தயாரிப்பது, நியாயமான தோ்தல்களுக்கும் வலுவான ஜனநாயகத்துக்கும் அடித்தளமாக அமையாதா?
தோ்தல் ஆணையம் செல்வாக்குக்கு கட்டுப்பட்டு, இறந்தவா்களையும், நிரந்தரமாகப் புலம்பெயா்ந்தவா்களையும் அல்லது பல இடங்களில் வாக்காளா்களாக தங்களைப் பதிவு செய்து கொண்டவா்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க அனுமதிக்க முடியுமா?
இந்தக் கேள்விகள் குறித்து அரசியல் சித்தாந்தத்துக்கு அப்பாற்பட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.
தகுதியற்ற வாக்காளா்களை முதலில் பிகாரிலும் பின்னா் ஒட்டுமொத்த நாட்டிலும் வாக்களிக்க அனுமதிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். எனவே, இறந்தவா்கள், நிரந்தரமாக புலம்பெயா்ந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க முடியாது என்றாா்.