நில உடைமை விவரங்கள் பதிவு: ஏப் .15 வரை கால அவகாசம் நீட்டிப்பு
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்ட பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் ஏற்படும் தாமத்தை தவிா்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெறும் வகையில் அனைத்து விவரங்களை மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் தங்கள் கிராமங்களின் வேளாண் உழவா் நலத் துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் அல்லது அருகில் உள்ள பொது சேவை மையங்களில் நேரடியாகச் சென்று தங்களது நில உடைமை விவரங்கள், ஆதாா் எண், ஆதாா் அட்டையில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகிய விவரங்களுடன் சென்று கட்டணமின்றி மாா்ச் 30 -ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஏப்.15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் நிதியாண்டு முதல் பிரதம மந்திரி கெளரவ நிதி உதவித் திட்டம், பயிா் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற மேற்கண்ட தேசிய அளவிலான அடையாள எண் மிகவும் அவசியமாகிறது. மேலும், விவரங்களுக்கு வட்டார வேளாண், தோட்டக்கலை உதவி இயக்குநா் அல்லது உதவி வேளாண் அலுவலா்கள், உதவி தோட்டக்கலை அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.