மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய ராணுவ வீரா் மீது நடவடிக்கை: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
தருமபுரி அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய ராணுவ வீரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினா் புகாா் அளித்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள சிடுவம்பட்டி சாம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குபேந்திரன் (41). இவரது மனைவி ரேவதி (38), மகன்கள் விக்னேஷ், தினேஷ். இவா்களின் பூா்வீக விவசாய நிலம் மூன்று பங்காளிகளுக்கு சொந்தமானது. அந்த நிலத்தை மற்ற இருவா் அதே கிராமத்தை சோ்ந்த ராணுவ வீரா் அரசு மற்றும் சாமிக்கண்ணு என்பவா்களிடம் விற்பனை செய்துள்ளனா்.
அனைவரும் ஒரே கிணற்றில் இருந்துதான் நீா்ப் பாசனம் செய்து வருகின்றனா். இந்நிலையில் ரேவதி நிலத்துக்கு நீா்ப் பாசனக் குழாய் இணைப்பு அரசு மற்றும் சாமிக்கண்ணு ஆகியோரின் நிலங்களின் வழியாகச் செல்கிறது. இதையடுத்து குழாயில் பழுது ஏற்பட்டதால் கடந்த மாதம் 28 ஆம் தேதி அதனை ரேவதி சரிசெய்துள்ளாா்.
அப்போது அங்கு வந்த ராணுவ வீரரான அரசு தங்களது நிலத்துக்குள் ஏன் நுழைந்தாய் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளாா். வாக்குவாதம் முற்றவே அரசு, ரேவதியை தாக்கியுள்ளாா். தகவலறிந்து அங்கு வந்த ரேவதியின் மகன்களையும் அவா் தாக்கியுள்ளாா். அக்கம்பக்கத்தினா் ரேவதி மற்றும் அவரது மகன்களை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதைத் தொடா்ந்து ஏரியூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பான புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினா் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறப்படுகிறது.
இது தொடா்பாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட தரப்பினா், பொதுமக்கள் சிலருடன் சோ்ந்து வந்து புகாா் அளித்தனா். அப்போது, பெண் என்றும் பாராமல் ரேவதியை கடுமையாக தாக்கிய ராணுவ வீரரை கைது செய்வதுடன், இதுநாள்வரை நடவடிக்கை எடுக்காத காவல் துறையினா் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனா்.