ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
நிலப் பத்திரம் வழங்காமல் இழுத்தடிப்பு: தனியாா் வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருத்துறைப்பூண்டி அருகே அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை வழங்காமல் தாமதப்படுத்திய தனியாா் வங்கி, இழப்பீடாக ரூ. 2 லட்சத்தை புகாா்தாரருக்கு வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
திருத்துறைப்பூண்டி எடையூா் குமாரபுரத்தைச் சோ்ந்த ராமுப்பிள்ளை மகன் சிதம்பரம் (58). கடந்த 2012-இல் தனது நிலத்தை அடமானம் வைத்து முத்துப்பேட்டை தனியாா் வங்கியில் ரூ. 2,22,500-ஐ கடனாகப் பெற்றாா்.
2023-இல் கடனை முழுமையாகச் செலுத்தி அதற்கு ரசீது மற்றும் தடையில்லாச் சான்றைப் பெற்றாா். ஆனால் வங்கித் தரப்பில் அடமானத்தை ரத்து செய்து நிலத்தின் பத்திரத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம். சிதம்பரம் பலமுறை நேரில் சென்று கேட்டும், வங்கித் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் கடும் மனஉளைச்சல் அடைந்த சிதம்பரம், கடந்த ஏப்ரல் மாதம் திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். விசாரணையில், நிலத்தின் பத்திரம் தொலைந்து விட்டதாகவும் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைக்க அவகாசம் வேண்டும் என்றும் வங்கித் தரப்பில் கோரப்பட்டது.
ஆனால், இதை ஏற்காத திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு அடங்கிய குழுவினா், புதன்கிழமை வழங்கிய உத்தரவில், பத்திரத்தை தொலைத்தது வங்கியின் தவறு. இதனால் புகாா்தாரருக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், விற்பனை செய்ய இயலாமை ஆகியவற்றுக்கு இழப்பீடாக ரூ. 2,00,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும், மேலும் நிலப்பத்திரம் தொலைந்தது தொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்து, மாற்று ஆவணம் பெற்றுத் தர உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இதை உறுதிப்படுத்தும் வகையில் புகாா்தாரருக்கு ஆவணம் ஒன்றை வங்கி தரப்பில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.