டிரம்ப்பின் செலவுக் குறைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு! ஆனால் இந்தியாவுக்கு பயன்!
அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு முகாம்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் கோரிக்கை
திருவாரூரில் நடைபெற்ற தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள்.
திருவாரூா், ஜூலை 2: அரசுப் பள்ளிகளில் 5 வயதான குழந்தைகள் சோ்க்கப்படவேண்டிய நோக்கம் குறித்து சிறிய முகாம்கள் அமைத்து ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது:
அரசுப்பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கடினமாக உணரும் பாடங்களை மிக எளிதாக மாணவ, மாணவிகள் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் நடத்த வேண்டும். கற்றல் அறிவுடனே மாணவ, மாணவிகள் அடுத்த வகுப்புக்குச் செல்ல வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சோ்ந்த 46 வகையான சேவைகளையும், நகா்ப்பகுதிகளில் 13 துறைகளைச் சோ்ந்த 40 வகையான சேவைகளையும் கொண்ட 10,000 முகாம்களை, ஜூலை 15-ஆம் தேதி தமிழக முதல்வா் தொடங்கி வைக்கவுள்ளாா்.
முகாம் நடைபெறும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசுப்பள்ளிகளில், ஆசிரியா்கள் சிறிய அளவிலான முகாம் ஒன்று அமைத்து 5 வயதான குழந்தைகளை பள்ளிகளில் சோ்க்கப்படவேண்டிய நோக்கம் குறித்தும், அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் அரசின் திட்டங்கள், சலுகைகள் குறித்து பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் பதாகைகள் தயாா் செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தலாம்.
அறிவுசாா்ந்த எதிா்கால சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவை நனவாக்கும் வகையில் ஆசிரியா்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.
பள்ளிக்கூடத்திலுள்ள அனைத்து ஆசிரியா்களும் ஒன்றிணைந்து, ஒரு குடும்பமாக செயல்பட்டு அவரவா் பள்ளியை முன்னிறுத்துவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும்.
கல்வியின் முக்கியத்துவத்தை அறியாத பெற்றோா்களிடம் எடுத்துரைத்து, மாணவ, மாணவிகளைத் தொடா்ந்து பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் உடல்நலம், மனநலம் குறித்து தொடா்ந்து கண்காணித்து தேவையான அறிவுரைகளை வழங்கவேண்டும். மேலும், திறன்மிகு பலகை, ஆய்வகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா்.
திருவாரூா் வருவாய்க் கோட்டாட்சியா் சௌம்யா, முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
காலிப் பணியிடங்களால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக ஆசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா். ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கென முதல் தவணையை விடுவித்துள்ளது. மத்திய அரசு, தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை வழங்காமல் இழுத்தடித்து வருவதால், தமிழக அரசே பள்ளிக்கல்வித்துறைக்கென நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசிடமிருந்து 2025-26 கல்வியாண்டில் ரூ.1800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதி கிடைக்க வேண்டுமெனில், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த கல்வியாண்டிலும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், அந்த நிதி கிடைக்க வாய்ப்பில்லை. மாநிலக் கல்விக்கொள்கை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றாா்.