Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது எஃப்ஐஆா் கோரிய மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புது தில்லி: நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அவா் மீது காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
இது தொடா்பாக வழக்குரைஞா் மேத்யூஸ் நெடும்புரா மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விவகாரத்தில் அவா் தாக்கல் செய்யும் மூன்றாவது மனு இதுவாகும். மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் பரிசீலனைக்கு வந்தது.
அப்போது நீதிபதி வா்மா என்று கூறுவதற்கு பதிலாக ‘வா்மா’ என்று மட்டும் குறிப்பிட்டு வழக்குரைஞா் வாதிட்டாா். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘அவா் என்ன உங்கள் நண்பரா? அவா் இப்போதும் நீதிபதி வா்மாவாகவே இருக்கிறாா். நீங்கள் எப்படி அவரின் பெயரை மட்டும் சுட்டிக்காட்டி பேசலாம்? இதில் சற்று ஒழுங்கு வேண்டும். ஒரு நீதிபதியை எப்படி அழைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றனா்.
இதற்குப் பதிலளித்த வழக்குரைஞா், ‘நீதிபதி என்ற மரியாதைக்குரிய பதவி அவருக்குப் பொருந்தும் என்று கருதவில்லை. அதைத்தான் விசாரணைக்கு முன்வைத்துள்ளோம். அதை விசாரிக்க வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து, நீங்கள் நீதிமன்றத்துக்கு ஆணையிட வேண்டாம். உங்கள் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று நினைக்கிறீா்களா? என்று கூறிய தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று நிராகரித்துவிட்டனா்.