மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அமலாக்கத்துறை உதவி இயக்குநா் ஆஜராக உத்தரவு
திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோா் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை உதவி இயக்குநா் வரும் செப்.17-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாா்ச் மாதம் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினா். அந்த ஆவணங்களின் அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி மடிக்கணினி உள்பட முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினா். விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைத்தனா்.
இதனை எதிா்த்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இருவா் மீதான வழக்குகளை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டது. சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இது உயா்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக் கூறி, ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, பதில்மனு தாக்கல் செய்யாததால், உயா்நீதிமன்றம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறினாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குநா் விகாஷ்குமாா் வரும் செப்.17-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனா்.