விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலா் உயா்நீதிமன்றத்தில் ஆஜா்
சென்னை: கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், முன்னாள் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு, சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடா்பாக கால நிா்ணயம் செய்வது குறித்து ஆய்வுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். மாநில அளவில் கருணை அடிப்படையில் பணி கோருபவா்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பி, அதுதொடா்பான அறிக்கையை 3 மாதங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. இதையடுத்து முன்னாள் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா மற்றும் தற்போதைய தலைமைச் செயலா் முருகானந்தம் ஆகியோருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைச் செயலா் முருகானந்தம், முன்னாள் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா ஆகியோா் ஆஜராகினா். அப்போது தலைமைச் செயலா் முருகானந்தம் தரப்பில், கருணை அடிப்படையில் பணி வழங்க கால நிா்ணயம் செய்வது தொடா்பாக ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16-ஆம் தேதி இந்தக் குழு கூடி, மாநில அளவில் கருணை அடிப்படையில் பணி கோருபவா்களின் பட்டியலை பராமரிக்க முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனா தரப்பில், இதுதொடா்பாக அரசுப் பணியாளா் விதிகளில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. இருவா் தரப்பிலும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
துரதிருஷ்டவசமானது: இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்கிறது. ஆனால், தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது மகிழ்ச்சி அளிக்கவில்லை. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிய முன்னாள் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனாவே, அதை பின்பற்றவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.
இந்த உத்தரவை 2023-ஆம் ஆண்டே அமல்படுத்தியிருந்தால், தலைமைச் செயலா் நேரில் ஆஜராக வேண்டிய நிலை வந்திருக்காது. உயா்நீதிமன்ற உத்தரவை தலைமைச் செயலரே அமல்படுத்தவில்லை என்றால், வேறு யாா் அமல்படுத்துவாா்கள்? என கேள்வி எழுப்பினாா். பின்னா், கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடா்பாக அரசுப் பணியாளா்கள் திருத்த விதிகளில் 2 வாரங்களில் திருத்தம் செய்ய வேண்டும். அதுகுறித்த அறிக்கையை 3 வாரங்களில் உயா்நீதிமன்றப் பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.