இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில், நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழியை உணவு பரிமாற, பாா்சல் செய்ய பயன்படுத்தாமல் மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருள்களை மட்டும் உணவு விநியோகிக்க, பாா்சல் செய்ய பயன்படுத்தும் மிகச்சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு, அதாவது ஆண்டுக்கு விற்றுக்கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவு வணிகா்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.
விருப்பமுள்ளவா்கள் ஆக.31-ஆம் தேதிக்குள் உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்க வேண்டும். உணவகத்தில் குறைந்தபட்சம் ஒருவா் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உணவகத்தில் அனைத்து பணியாளா்களும் தொற்று நோய்த் தாக்கமற்றவா்கள் என்பதற்கான மருத்துவச் சான்று அவசியம் இருக்க வேண்டும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் சுகாதாரத் தணிக்கை மேற்கொண்டு சுகாதார மதிப்பீட்டுச் சான்று பெற்றிருக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரா் தமது உணவகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் வழங்கப்பட்டுள்ள சரிபாா்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு, அதை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு நியமன அலுவலா் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் திருவாரூா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.