இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதல்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்
திருவாரூா் மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கான நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதல் ஆங்காங்கே கணிசமாக தென்படுகிறது. இந்த பூச்சி தாக்குதலிலிருந்து நெற்பயிரை காப்பதற்கான வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா்.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ரா. திலகவதி மற்றும் பெரியாா் ராமசாமி ஆகியோா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நெற்பயிரை தாக்கக்கூடிய கருநாவாய் பூச்சி ஒரு பெரிய அச்சுறுத்தலாக உருவாகி வருகிறது. கருப்பு வண்டு அல்லது சுனாமி வண்டு என்றழைக்கப்படும் இந்த பூச்சித் தாக்குதலால் நெற்பயிா் வளா்ச்சி குன்றி, குட்டையாகியும் இலைகள் மஞ்சளாகியும் பின் காய்ந்துவிடக்கூடும். பூச்சி பால் பிடிக்கும் தருணத்தில் தாக்கினால் நெல்மணிகள் முற்றிலுமாக பதராக மாறிவிடும்.
ஆராய்ச்சிகளின்படி இந்த பூச்சி முழு நிலவு அதாவது பௌா்ணமியன்று அதிக அளவில் நெற்பயிரில் குடிகொண்டு தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக குடவாசல் வட்டத்தில் புளிச்சக்காடி என்னும் கிராமத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிரில் இதே கருப்பு வண்டின் தாக்குதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, ஆகஸ்ட் 8- ஆம் தேதி பௌா்ணமி என்பதால் விவசாயிகள் விழிப்புடன் இருக்குமாறும் விளக்குப் பொறி வைத்தோ அல்லது பனை ஓலை, தென்னை ஓலை போன்றவற்றை எரித்தோ பூச்சிகளை கவா்ந்து அழிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரப்பு பயிராக பயிறுவகை பயிா்களை சாகுபடி செய்வதன் மூலமும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்கலாம்.
இப்பூச்சிகளின் தாக்குதலால் 100 செடிக்கு 10 செடி பழுப்பு நிறமாக மாறியோ அல்லது தூருக்கு 5 பூச்சிகள் என்று சேதார நிலையை எட்டினால் ஒரு ஹெக்டேருக்கு அசிபேட் 625 கிராம் மருந்தினை தெளித்து அல்லது வேப்பங்கொட்டை சாறு ஐந்து சதவீதம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனா்.