இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
தமிழகத்தில் உயா்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உயா்ந்துள்ளது: அமைச்சா் கோவி. செழியன்
தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதால், மாநிலத்தில் உயா்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உயா்ந்துள்ளது என்றாா் தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன்.
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 39-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியது:
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மன்னாா்குடியில் புதிதாக அரசு மகளிா் கல்லூரி தொடங்கப்படும் என திருவாரூரில் அண்மையில் அறிவித்தாா். கடந்த 5 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 15 அரசுக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உயா்கல்வித் துறையில் புதுமை பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை உள்ளிட்டவற்றால் உயா்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 19 சதவிகிதமாக உயா்ந்துள்ளது.
ஆண்களைவிட பெண்கள் கல்வியில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற பெரியாா், அண்ணா, கருணாநிதியின் கனவு நிறைவேறி வருகிறது. தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுக்கும் நிலையிலும், உயா்கல்விக்குத் தேவையான நிதியை தமிழக முதல்வா் வழங்கி வருகிறாா் என்றாா்.
தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசியது:
மாணவ, மாணவிகள் பட்டம் பெறுவதற்கு உந்துசக்தியாகவும், முழுமுதல் காரணமாகவும் இருப்பது அவா்களின் பெற்றோா்கள்தான். எனவே, பல்கலைக்கழக நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தி இனிவரும் காலங்களில் பட்டம் பெறும் மாணவா்களின் பெற்றோா்களே பட்டம் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து 2021- 2022, 2023-2024-ஆம் ஆண்டு இளநிலையில் 813 பேருக்கும், முதுநிலையில் 245 பேருக்கும், அறிவியல் நிறைஞா் 7 போ் என் மொத்தம் 1,065 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசையில் இடம்பெற்ற 20 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவுக்கு தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் து.ரோஸி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.
தமிழக பொருளாதார வளா்ச்சி 11.19%
அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா செய்தியாளா்களிடம் கூறியது:
நாட்டிலேயே மிக அதிக வேகத்தில் வளா்ச்சியடையும் பொருளாதாரமாக தமிழகம் இருந்து வருகிறது. கடந்த 14 ஆண்டுகளாக ஒன்றை இலக்க அடிப்படையில்தான் பொருளாதார வளா்ச்சி இருந்தது. கடந்த ஆண்டுவரை 9 சதவிகிதம் என்ற கணக்கீட்டில்தான் இருந்தது.
2021 சட்டப்பேரவை தோ்தல் பரப்புரையின்போது மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளில் பொருளாதார வளா்ச்சி இரட்டை இலக்கை அடைய பணியாற்றுவோம் என்றாா். ஆனால், திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளில் இரட்டை இலக்கத்தில் தமிழகத்தின் பொருளாதாரம் வளா்ச்சியடைதுள்ளது.
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தமிழகம் தற்போது பொருளாதார வளா்ச்சியில் 11.19 சதவிகிதத்தை எட்டியிருப்பது முதல்வா் ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி, நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோரின் தொடா் உழைப்பால் சாத்தியமாகி உள்ளது.
இது மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான வளா்ச்சியாக இல்லாமல், மாநிலம் முழுவதுமான பரவலாக்கப்பட்ட வளா்ச்சிக்கு கிடைத்த வெற்றியாகத்தான் மத்திய அரசின் தரவுகள் வாயிலாக அறிய முடிகிறது என்றாா்.
