நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
ராமேசுவரத்தில் தடை செய்யப்பட்ட 480 கிலோ நெகிழிப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை, நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கு.லிங்கவேல், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் மகேந்திரன், நகராட்சி மேற்பாா்வையாளா் ஹமீது ஆகியோா் நகராட்சிப் பணியாளா்களுடன் நகரில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 480 கிலோ நெகிழிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதுடன் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தை அமாவாசையையொட்டி, ராமேசுவரத்துக்கு வரும் பொது மக்களுக்கு உணவுகளை வாழை இலையில் பறிமாற வேண்டும். சூடான சாம்பாா், தேநீா் வகைகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கலன்களில் மட்டும் விற்பனை செய்யவும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு அறிவுருத்தினா்.