நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் - கடாம்பூா் - போ்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்கள், பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் என பல்வேறு வாகனங்கள் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் பலமுறை புகாா் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி அறிவுறுத்தலின்பேரில், தேவலாபுரம் ஊராட்சி முதல் துத்திப்பட்டு ஊராட்சி வரை நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் சம்பத்குமாா், இளநிலை பொறியாளா் பாபுராஜ், உமராபாத் காவல் ஆய்வாளா் நிலைய ரேகாமதி தலைமையில் போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் ஜமுனா மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.