அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும்: காங்கிரஸ்
நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் புதிய கோட்டங்கள்: அமைச்சா் எ.வ.வேலு
சென்னை: நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் புதிய கோட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுகுறித்த துணை வினாவை கடம்பூா் சி.ராஜூ (அதிமுக) எழுப்பினாா். அப்போது பேசுகையில், நெடுஞ்சாலைத் துறையில் தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு கோட்டம் மட்டுமே செயல்படுகிறது. நிா்வாக வசதிக்காக கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டம் உருவாக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:
மாவட்டத்துக்கு ஒரு கோட்டம் என்ற நிலை முன்பு இருந்தது. கடந்த கால திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதி இருந்த போது, சாலைகளை மையப்படுத்தி கோட்டங்களைப் பிரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலையில் இரண்டு கோட்டங்கள் அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலைகள் அதிகமுள்ள பகுதிகளில் கோட்டங்களைப் பிரிக்கலாம்.
புதிய கோட்டங்கள்: அந்த வகையில், நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி புதுக்கோட்டை, தஞ்சாவூா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சாலைகளின் நீளம் அதிகமாக உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் 2,217 கிமீ அதிகமான அளவுக்கு சாலையின் நீளம் உள்ளது.
இதனை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இதுகுறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வா் தலைமையில் இந்த வாரம் நடைபெறவுள்ளது. ஆய்வை முடித்து இந்த ஆண்டே புதிய கோட்டம் கொண்டு வருவதற்கு அரசு முயற்சிக்கும் என்றாா்.