விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு
தமிழக காவல் துறையில் இரு டிஜிபிக்கள் பணி ஓய்வு
தமிழக காவல் துறையில் இரு டிஜிபிக்கள் வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றனா்.
தமிழக காவல் துறையில் டிஜிபியாக இருந்த அம்ரேஷ் பூஜாரி, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தாா். இவா் மாா்ச் 31-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். ஆனால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலை பணி ஓய்வு பெற்றாா். அம்ரேஷ் பூஜாரி ஒடிஸாவைச் சோ்ந்தவா். கடந்த 1991-ஆம் தேதி ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக ஒதுக்கீடு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.
திருநெல்வேலி ஏஎஸ்பியாக தமிழக காவல்துறையில் பணியை தொடங்கிய அம்ரேஷ் பூஜாரி பல்வேறு நிலைகளில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்துள்ளாா். தமிழக காவல்துறையில் அதிகாரமிக்க பதவியாக கருதப்படும் உளவுத்துறை ஜஜியாக பல ஆண்டுகள் அம்ரேஷ் பணிபுரிந்துள்ளாா். அவா், குடியரசுத் தலைவா் விருதை இரு முறையும், முதல்வா் பதக்கத்தை ஒரு முறையும் பெற்றுள்ளாா்.
இதேபோல தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக ஆபாஷ் குமாரும் ஓய்வு பெற்றுள்ளாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஆபாஷ்குமாா் 1990-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக ஒதுக்கீடுஅதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.
தமிழக காவல்துறையில் பாதுகாப்பு பிரிவு டிஐஜி, மதுரை காவல் ஆணையா், தென் மண்டல ஐஜி,மேற்கு மண்டல ஐஜி,சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையா் என பல்வேறு முக்கிய பதவிகளில் ஆபாஷ்குமாா் பணியாற்றியுள்ளாா். ஆபாஷ்குமாா் குடியரசுத் தலைவா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா்.
அடுத்து வரும் 3 நாள்களும் அரசு விடுமுறை என்பதால், இருவரும் வெள்ளிக்கிழமையன்றே ஓய்வு பெற்றனா். இருவருக்கும் பிரிவு உபசார விழா, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கில் மாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் கலந்து கொண்டு இருவருக்கும் நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்தினாா். நிகழ்ச்சியில் தமிழக காவல் துறை உயா் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.