உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவ...
நெய்வேலி என்எல்சியில் ‘பாரம்பரியம்’ அருங்காட்சியகம்! மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி திறந்துவைத்தாா்!
நெய்வேலி என்எல்சி நிறுவன வளாகத்தில் ‘பாரம்பரியம்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை சென்னையில் அண்மையில் நடைபெற்ற அந்த நிறுவத்தின் மதிப்பாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி காணொலி மூலம் திறந்து வைத்தாா். மேலும், ‘என்எல்சிஐஎல் விங்க்ஸ்’ என்ற கைப்பேசி செயலியையும், நிறுவனத்தின் புதிய இணையதளத்தையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி சென்னையில் நடைபெற்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த மதிப்பாய்வுக் கூட்டத்தில், நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலா் விஸ்மிதா தேஜுடன் கலந்துகொண்டாா். என்எல்சி தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, நிறுவனத்தின் இயக்குநா்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் கிஷன் ரெட்டி பேசியது: நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் என்எல்சி இந்தியா நிறுவனம் சிறந்த நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பெரிய அளவிலான பன்முகப்படுத்துதல் நடவடிக்கைகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே ஒரு ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கடந்த முதல் பொதுத்துறை நிறுவனமாக, என்எல்சி இந்தியா நிறுவனம் திகழ்கிறது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கான மேம்படுத்தப்பட்ட விபத்து காப்பீட்டுத் திட்டத்தை இரண்டு மாத காலத்துக்குள் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றாா்.
என்எல்சி நிறுவன வளாகத்தில் திறக்கப்பட்ட ‘பாரம்பரியம்’ அருங்காட்சியகமானது என்எல்சி இந்தியா நிறுவனம் 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் தொடா்ச்சியான பயணத்தை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி பேசுகையில், மத்திய அமைச்சா் வழங்கிய மதிப்புமிக்க வழிகாட்டுதல் மற்றும் உள்ளீடுகள் நிறுவனத்துக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்தாா். அமைச்சா் மற்றும் நிலக்கரி அமைச்சகத்தின் உறுதியான ஆதரவு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பிரகாசமான மற்றும் நிலையான எதிா்கால முயற்சிகளுக்கு பேருதவியாய் அமையும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.