நெருங்கும் பொங்கல் பண்டிகை: மண் பானைகள் தயாரிப்பு மும்முரம்
பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு புதுப்பானை வைத்து பொங்கலிடுவதற்காக அரியலூா் மாவட்டத்தில் அதிகளவில் மண்பானைகள் தயாராகி வருகின்றன.
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள சோழமதேவி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் உள்ளவா்கள் அனைவரும் மண்பானை தொழில் செய்கின்றனா். பல வடிவ மண் பானைகள், பிரமனைகள், அகப்பை, தட்டுகள் உள்ளிட்டவை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் பானைகள் அரியலூா், பெரம்பலூா், கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, கடலூா், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறன.
இதுகுறித்து சோழமாதேவியைச் சோ்ந்த மண்பானைத் தொழிலாளி கலியமூா்த்தி கூறியது: கடந்த மூன்று தலைமுறையாக இத்தொழிலை செய்கிறோம். பொங்கல் பண்டிகைக் காலங்களில் மட்டுமே மண்பானை செய்யும் தொழிலில் வருமானம் உள்ளது. தற்போது பரபரப்பான நகர வாழ்க்கை முறையில், பித்தளை, சில்வா் பாத்திரங்கள் மற்றும் குக்கரில் பொங்கல் வைக்கும் நடைமுைான் உள்ளது. அதேவேளையில் பாரம்பரியமும், பண்பாடும் காப்பாற்றப்படும் வகையில் மண் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைப்பது மெல்ல மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த தலைமுறை பொங்கலை பாரம்பரியத்துடன் கொண்டாட முனையும் நிகழ்வாக உள்ளது.
நாங்கள் தயாரிக்கும் மண்பானைகள் பொங்கல் பண்டிகைக்காக விற்பனை செய்ய அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் இருந்து மொத்த வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனா்.பொங்கலுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில் மண்பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நிகழாண்டு விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம் என்றாா்.