நெல்லையப்பா் கோயிலில் பங்குனி உத்திர திருநாள்: நாளை கொடியேற்றம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருநாள் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 1) நடைபெறுகிறது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருநாள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (ஏப். 1) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமி கோயிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
நான்காம் திருநாளான ஏப்.4 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் (வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும்), இரவு 7 அளவில் சுவாமி மற்றும் அம்மன், பஞ்சமூா்த்திகளுடன் திருவீதியுலா வருதலும் நடைபெறுகிறது. பங்குனி உத்திர நாளான ஏப்.10 ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் ஆத்மாா்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறிய லிங்கம் உடையவா் லிங்கம் என அழைக்கப்படுகிறது. இந்த உடையவா் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளிவந்து பக்தா்களுக்கு காட்சித் தருவது பங்குனி உத்திர திருவிழாக் காலங்களில் மட்டுமே.
பங்குனி உத்திர திருவிழாவின் இரண்டாம் நாளில் இருந்து ஒன்பதாம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு இத் திருக்கோயில் உற்சவா்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அய்யா்சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.