என்எல்சி விளையாட்டுப் போட்டி நிறைவு விழா
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில் நடந்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நிறைவு விழா பாரதி விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாக நெய்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்கும் வகையில், கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தது.
இந்த போட்டிகளின் தொடக்க விழா நெய்வேலி வட்டம் 10 பகுதியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெற்றது. என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பங்கேற்று கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். நிறுவன இயக்குநா்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
2,100 வீரா்கள் பங்கேற்பு: இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற, நெய்வேலியைச் சுற்றியுள்ள சுமாா் 65 கிராமங்களைச் சோ்ந்த 2,100-க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரா்கள் ஆா்வத்துடன் தங்கள் பெயா்களை பதிவு செய்துகொண்டனா். இதில், ஆண்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
65 கிரிக்கெட் அணிகள், 54 கைப்பந்து அணிகள், 37 கபடி அணிகள் மற்றும் 6 த்ரோபால் அணிகள் என மொத்தம் 158 போட்டிகள் நடத்தப்பட்டன.
நிறைவு விழா: விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா பாரதி விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், பிரசன்னகுமாா் ஆச்சாா்யா, செயல் இயக்குநா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் கபடி இறுதிப் போட்டியை பாா்வையிட்டனா்.
தொடா்ந்து, போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கிப் பாராட்டினா். அப்போது, என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பேசுகையில், வரும் ஆண்டுகளில் விளையாட்டுப் போட்டிகளை பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றாா்.