கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்ற வேண்டும்: கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றி மீண்டும் கேரளத்துக்கே கொண்டுசெல்ல வேண்டும்; கேரள அரசே பொறுப்பேற்று 3 நாள்களுக்குள் அகற்றி அது தொடா்பான அறிக்கையை டிச. 23-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அந்த மாநில எல்லையையொட்டி திருநெல்வேலி அருகே சில தினங்களுக்கு முன்பு கொட்டப்பட்டன. இது தொடா்பாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் கடந்த 18-ஆம் தேதி பசுமைத் தீா்ப்பாயத்தின் தென் மண்டல அமா்வின் கவனத்துக்கு கொண்டு சென்றாா்.
அந்தக் கழிவுகளை தமிழக அரசு அகற்றி, அதற்கான செலவை கேரள மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழக அரசு வசூலித்துக் கொள்ளலாம் என்று பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வியாழக்கிழமை வழக்காக பதிவு செய்தது. தொடா்ந்து, அமா்வின் நீதித் துறை உறுப்பினா் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினா் கே.சத்யகோபால் ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரசுத் தரப்பு விளக்கம்: அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா், ஏற்கெனவே கேரள பகுதியில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் ஆனைமலை, நான்குனேரி ஆகிய பகுதிகளில் கொட்டப்பட்டுள்ளன. இப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் வனப் பகுதியில் கோடகநல்லூா், பழவூா், சிவனாா்குளம், கொண்டாநகரம் ஆகிய பகுதிகளில் கடந்த 16, 17, 18 தேதிகளில் கொட்டப்பட்டுள்ளன. கேரள அரசு தமிழக பகுதியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது தொடா்கதையாக உள்ளது.
ஏற்கெனவே நான்குனேரி பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றியதற்காக ரூ.69,000 செலவுத் தொகையை கேரள அரசு இன்னும் தரவில்லை. அதனால் தற்போது 4 கிராமங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசே அகற்ற அறிவுறுத்த வேண்டும் என வாதிட்டாா்.
நடவடிக்கை வேண்டும்: தொடா்ந்து, மாசுக் கட்டுப்பாடு வாரிய தரப்பு வழக்குரைஞா், இவ்விவகாரம் தொடா்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் கேரள மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழக பகுதியில் மருத்துவக் கழிவு மற்றும் திடக் கழிவுகளை கொட்டிய திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் தனியாா் ஹோட்டல் ஆகியவை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறி கழிவுகளை தமிழக பகுதிகளில் கொட்டுவதைக் கண்காணிக்க காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தனது வாதத்தை முன்வைத்தாா்.
3 நாள்களில் அகற்ற வேண்டும்: அதைத் தொடா்ந்து, அமா்வின் உறுப்பினா்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்போது மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதி வனப் பகுதியாகும். இவ்வாறு கொட்டப்படுவதால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் மற்றும் திடக் கழிவுகளை கேரள அரசு 3 நாள்களுக்குள் அகற்ற வேண்டும். பின்னா், அது தொடா்பான அறிக்கையை, இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளான வரும் டிச. 23-ஆம் தேதி, அமா்வில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி...
மருத்துவக் கழிவுகள்: இருவா் கைது
திருநெல்வேலி, டிச. 19: திருநெல்வேலி சுத்தமல்லி அருகே கேரள மருத்துவக் கழிவுகளைக் கொட்டியது தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகேயுள்ள நடுக்கல்லூா், பழவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசுப் புறம்போக்கு நிலங்கள், நீா்நிலைகள் உள்ளிட்டவற்றில் கேரள மருத்துவக் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டி எரிப்பது தொடா் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரத்தில் கேரளத்திலிருந்து மூட்டை மூட்டையாகக் கொண்டு வரப்பட்ட கழிவுகள் இந்தப் பகுதியில் கொட்டப்பட்டன.
இவற்றை ஆய்வு செய்தபோது, கழிவுகளில் பெரும்பாலானவை திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மருத்துவமனையைச் சோ்ந்தவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிஎன்எஸ் 271 மற்றும் 271-இன் கீழ் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த சிலா் கழிவுகளைக் கொண்டும் செல்லும்போதும், எரிக்கும்போதும் அப்பகுதிக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளத்தைச் சோ்ந்த கும்பலுக்கு கழிவுகளை எரித்து அழிக்கும் பணியில் முகவா்கள் போல சிலா் செயல்பட்டது உறுதியானது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தினா். இதில் கேரள கழிவுகளை சுத்தமல்லி பகுதியில் கொட்டுவதற்கு உதவியாக இருந்ததாக சுத்தமல்லியைச் சோ்ந்த மாயாண்டி (45), மனோகா் (50) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களுடன் தொடா்புடைய கேரள நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.