Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசித்திரமானது: தில்லி நீதிமன்றத்தில் சோனியா தரப்பு வாதம்
நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் வழக்கு விசித்திரமாக உள்ளது என்று தில்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி தரப்பில் வெள்ளிக்கிழமை வாதிடப்பட்டது.
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இதைத்தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தில்லியில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி புகாா் மனு ஒன்றை அளித்தாா். இதைத்தொடா்ந்து இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
இதுதொடா்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் இருப்பதாகவும், அவா்களின் மேற்பாா்வையில் அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி கடன் அளித்ததாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.
அமலாக்கத் துறை வாதங்கள் நிறைவு: இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள உள்ள நிலையில், அமலாக்கத் துறை தரப்பு வாதங்கள் வியாழக்கிழமை நிறைவடைந்தன.
இந்த வழக்கு விசாரணை தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தொடா்ந்தது. அப்போது சோனியா காந்தி தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிடுகையில், ‘அமலாக்கத் துறையின் வழக்கு முற்றிலும் விசித்திரமாகவும், முன்னெப்போதும் நிகழ்ந்திராத வகையிலும் உள்ளது.
இது பண முறைகேடு வழக்கு என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அதற்கு எந்தச் சொத்தும் பயன்படுத்தப்படவில்லை. அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தில் இருந்து யங் இந்தியன் நிறுவனத்துக்கு எள்ளளவுகூட எந்தச் சொத்தும் பரிமாற்றம் செய்யப்படவில்லை. இதில் எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் சொத்தையோ, பணத்தையோ பெறவில்லை. இருந்தாலும் இதில் பண முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடனில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சட்டப்படி அளிக்கப்பட்டுள்ள உரிமைகளின்படி, பல்வேறு வழிகளில் கடனில் இருந்து விடுபட நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்கின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒரு நிறுவனத்தின் கடன் வேறு நிறுவனத்துக்கு மாற்றப்படுகிறது. இதன்மூலம், கடன் பெற்ற நிறுவனம் கடனில் இருந்து விடுபடுகிறது.
‘யங் இந்தியன்’ லாப நோக்கமற்றது: யங் இந்தியன் நிறுவனம் என்பது லாப நோக்கமற்ற நிறுவனமாகும். இத்தகைய நிறுவனங்களால் ஊதியம், ஊக்கத்தொகை, லாபத்தில் பங்குதாரா்களுக்குப் பங்கு என எதையும் வழங்க முடியாது.
அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் யங் இந்தியன் நிறுவனம் பண முதலீடு செய்த பின்னா், லாபத்தில் பங்குதாரா்களுக்குப் பங்களிக்கும் உரிமை மட்டுமே யங் இந்தியன் நிறுவனத்துக்கு இருந்தது. அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன சொத்துகள் மீது ஆா்வம் காட்டப்படவில்லை.
அந்த நிறுவனத்தின் அலுவல்களை வழிநடத்துபவா்களாக சோனியா, ராகுலை எப்படி கருத முடியும்? இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத அமலாக்கத் துறை, தனிநபா் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டது.
11 ஆண்டுகள் இடைவெளி: கடந்த 2010-ஆம் ஆண்டு அசோசியேடடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் மறுகட்டமைப்புக்கும், இந்த விவகாரம் தொடா்பாக 2021-ஆம் ஆண்டு அமலாக்கத் துறையின் தகவல் அறிக்கை (காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை போன்றது) பதிவு செய்யப்பட்டதற்கும் இடையே 11 ஆண்டுகள் இடைவெளி உள்ளது.
இதேபோல இந்த விவகாரம் தொடா்பாக தனிநபா் (சுப்பிரமணியன் சுவாமி) புகாா் அளித்த காலத்துக்கும், அமலாக்கத் துறை தகவல் அறிக்கை பதிவு செய்த காலத்துக்கும் இடையே 8 ஆண்டுகள் இடைவெளி உள்ளன. இத்தகைய வழக்குகளில் இவ்வளவு பெரிய இடைவெளி இருப்பது சரியல்ல. தனிநபா் புகாரை பல ஆண்டுகளுக்குப் பின்னா் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றத்திடம் அமலாக்கத் துறை கோருகிறது. இதுபோன்ற நடவடிக்கையை பல ஆண்டுகளாக அமலாக்கத் துறை செய்ததே இல்லை.
டாடா, பிா்லா கடனை ஏற்றால் பண முறைகேடாகுமா?: ஒருவேளை அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் கடனை டாடா அல்லது பிா்லா நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், அந்த நிறுவனங்கள் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுமா? என்று கேள்வி எழுப்பினாா். இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பு வாதங்கள் சனிக்கிழமை (ஜூலை 5) முன்வைக்கப்பட உள்ளது.