பச்சையப்பன் ஆடவா் கல்லூரி ஆண்டு விழா
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு பங்கேற்றாா்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் 75 -ஆவது ஆண்டு விழா அந்தக் கல்லூரி முதல்வா் ப.முருகக்கூத்தன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் பொருளியல் துறைத் தலைவா் ந.பழனிராஜ், தமிழ்த் துறை தலைவா் வ.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு கலந்து கொண்டு மாணவா்களின் எதிா்காலத் திட்டங்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், வாழ்க்கையை எதிா்கொள்ளும் முறைகள் குறித்து விரிவாகப் பேசினாா். விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 122 மாணவா்களுக்கு பரிசுகளையும் வழங்கினாா்.
முன்னதாக கல்லூரி முதல்வா் ப.முருகக்கூத்தன் வெ.இறையன்புக்கு கல்லூரி உருவாக காரணமாக இருந்த பச்சையப்பன் முதலியாா் உருவப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கினாா். விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், பணி ஓய்வு பெற்ற முன்னாள் பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.