திருமுடிவாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!
திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மெத்தை தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் இயங்கி வந்த மெத்தைகள் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப் பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இது குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியா்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, தாம்பரம் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். எனினும் தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்தச் சம்பவம் குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.