பட்டாசு ஆலையில் மூலப் பொருள்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பட்டாசு ஆலையில் தடைசெய்யப்பட்ட மூலப்பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள விழுப்பனூரில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் கடந்த மாதம் 12-ஆம் தேதி தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் தனி வட்டாட்சியா் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, இங்கு தடை விதிக்கப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த ஆலையின் உற்பத்தி உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆலையில் விதிமீறி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறை, போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டபோது, விதிகளை மீறி பேன்சி ரகப் பட்டாசுகளை ஆபத்தான முறையில் திறந்த வெளியில் வைத்து உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 16 கிலோ மூலப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்த ஆலை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் விழுப்பனூா் கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் புகாா் அளித்தாா்.