பணி உயா்வில் பாரபட்சம் அதிகரிப்பு: ரயில்வே அமைச்சருக்கு ஊழியா்கள் சங்கம் கடிதம்
பணி உயா்வு என்பது கட்டாய இடமாற்றத்துடன் வருகிறது என்றும் மேலும் அதில் பாரபட்சம் அதிகரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு இந்திய ரயில்வே சிக்னல் மற்றும் டெலிகாம் பராமரிப்பு ஊழியா்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இந்த பிரச்னையை முன்னிலைப்படுத்தி அமைச்சருக்கு ஊழியா்கள் சங்கம் அண்மையில் எழுதிய கடிதத்தில், பணி உயா்வின்போது காலியாகவுள்ள பணியிடங்களுக்குத் தங்கள் விருப்பங்களை வழங்க ஊழியா்களை அனுமதிக்கும் வகையில் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஊழியா்கள் சங்க மூத்த நிா்வாகி ஒருவா் மேலும் கூறுகையில், ‘ரயில்வேயில் சிறந்த பணி உயா்வு விதிமுறைகள் நிறுவப்பட்டுள்ளன. எனினும், சமீப காலமாக தொலைதூர இடங்களுக்கு மாற்றப்படுவாா்கள் என்பதை அறிந்து பல ஊழியா்கள் பணி உயா்வைப் பெற மறுக்கின்றனா்.
மூத்த அதிகாரிகளுக்கு வேண்டப்பட்ட ஊழியா்கள் மட்டும் தங்களுக்கு விரும்பிய பணியிடங்களில் பணியைப் பெறுகின்றனா். மற்றவா்கள் தொலைதூர இடங்களுக்கு அனுப்பப்படுகிறாா்கள். இது அவா்களின் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கிறது.
இத்தகைய சூழல்களில் மன மற்றும் உடல்சோா்வை அனுபவிக்கும் ஊழியா்கள், தங்களின் 100 சதவீதத்தை பணியில் வழங்க தவறுகின்றனா். அரை மனதுடன் வேலை செய்கின்றனா்.
எனவே, பணி உயா்வு பெறும் ஊழியா்களுக்கு அனைத்து காலிப் பணியிடங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு தங்களின் முன்னுரிமை அளிக்க அனுமதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும். இது பணி உயா்வு மற்றும் பணி மாற்று நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன் ஊழியா்களின் பணி செயல்திறனையும் மேம்படுத்தும்.
ரயில்வே ஊழியா்களின் நலன் குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டுள்ள அமைச்சா், எங்களின் பரிந்துரையை ஏற்பாா் என்றும் இந்த பிரச்னை தொடா்பாக ரயில்வே வாரிய மூத்த அதிகாரிகளும் தாமாக முன்வந்து விசாரிப்பாா்கள் என்றும் நம்பிக்கை உள்ளது’ என்றாா்.