Aus v Ind : 'தொடரை இழந்த இந்தியா!' - கம்பீர் செய்த அந்த 3 தவறுகள்
பணிநிரவல் விவகாரம்: அண்ணாமலைப் பல்கலை.யில் தனி அலுவலா்கள் தா்னா
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இந்தப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றதையடுத்து, ஆசிரியா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பணிநிரவல் செய்யப்பட்டனா். இங்கு தனி மற்றும் தொடா்பு அலுவலா்களாக பணியாற்றிய 648 பேரில், 130 போ் இதுவரை பல்வேறு அரசுத் துறைகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனா். தற்போது, மேலும் 23 பேருக்கு பணிநிரவல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய ஊதிய உயா்வு, 7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகை ஆகியவற்றை வழங்கிவிட்டு பணிநிரவல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 31-ஆம் தேதி தா்னாவில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தனி மற்றும் தொடா்பு அதிகாரிகள் நலச் சங்கம் சாா்பில் பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் தனசேகர பாண்டியன் தலைமை வகித்தாா். தனசேகரன், வரதராஜன், காா்த்திகேயன், மணிகண்டன், ராஜரத்தினம், உதயகுமாா் உள்ளிட்ட பலா் பேசினா். நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
சங்கத்தின் முக்கிய நிா்வாகிகளை அழைத்து துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் பேராசிரியா் அருட்செல்வி, பதிவாளா்(பொ) பிரகாஷ், வட்டாட்சியா் ஹேமா ஆனந்தி, அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் க.அம்பேத்கா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
வருகிற 6-ஆம் தேதி சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது. மாலை 6:30 மணியளவில் போராட்டம் நிறைவு பெற்றது.