`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சிஐடியு மாநில துணைத் தலைவா் எம். மகாலட்சுமி வலியுறுத்தினாா்.
திருவாரூரில், சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆகியவை இணைந்து சா்வதேச மகளிா் தின திறந்தவெளி கருத்தரங்கத்தை சனிக்கிழமை மாலை நடத்தின.
நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளரும், மாநில இணை கன்வீனருமான இரா. மாலதி, அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட மகளிா் அமைப்பாளா் த. தமிழ்சுடா் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பா. கோமதி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் ஏ. பிரேமா, ஐசிடிஎஸ் சங்கத்தின் மாநிலச் செயலாளா் வி. தவமணி, தமிழ்நாடு கிராம செவிலியா் சங்கத்தின் மாநில அமைப்பாளா் ஆா். பரமேஸ்வரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிஐடியு மாநில துணைத் தலைவா் எம். மகாலட்சுமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசியது:
மத்திய அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. பல இடங்களில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனா். இந்த நிலை மாற வேண்டும். பெண்களுக்கு கண்ணியமான வேலையை அரசு உறுதி செய்ய வேண்டும்.
7-ஆவது பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பணிபுரியக் கூடிய இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். நீதிபதி வா்மா குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றாா்.
இக்கருத்தரங்கில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே. என். அனிபா, பொருளாளா் கே. கஜேந்திரன், கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.பி.ஜோதிபாசு, அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.