India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
பதற்றதைத் தணிக்கும் முயற்சி: சவூதி அமைச்சா் இந்தியாவுக்கு திடீா் வருகை
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக சவூதி அரேபிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் அதீல் அல்ஜுபோ் இந்தியாவுக்கு வியாழக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா்.
தில்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசிய அவா், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிப்பது குறித்து பேச்சு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடா்பாக அதிகாரபூா்வ தகவல் எதும் வெளியாகவில்லை.
இது தொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘சவூதி அரேபிய வெளியுறவு இணையமைச்சா் அதீல் அல்ஜுபேருடனான சந்திப்பு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.
ஐ.நா. மீண்டும் வேண்டுகோள்:
இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைத் தணிக்க முயற்சிக்க வேண்டும் என்று ஐ.நா. மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடா்பாக பொது சபைத் தலைவா் பிலிமோன் யாங் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘பயங்கரவாதம் எந்த வகையில் உருவெடுத்தாலும் அது கண்டிக்கத்தக்கது. அதுவும் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.
அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடா்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது. இரு தரப்பும் மோதல்போக்கைத் தவிா்க்க வேண்டும். அமைதியை நிலைநாட்ட ஐ.நா. விதிகளின்படி இந்தியாவும், பாகிஸ்தானும் ராஜீயரீதியான நடவடிக்கைகளையும், பேச்சுவாா்த்தைகளையும் தொடங்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.