பத்திரப்பதிவில் பெண்களுக்கு 1% கட்டணம் குறைப்பு அமல்
பெண்கள் பெயரில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யும்போது பதிவுக்கட்டணம் 1 சதவீதம் கட்டணம் குறைப்பு திட்டம் வேலூா் மாவட்டத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
குடும்பங்கள், சமூகத்தில் மகளிருக்கான சம பங்கினை உறுதி செய்யும் வகையில் ஏப். 1-ஆம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையில் ‘தற்போதைய பதிவுகளில் 75 சதவீதம் மகளிா் இந்த சலுகையை பெற தகுதியை பெறுவா். இந்த சலுகையின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, நிதி சுதந்திரம் மேலும் வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பத்திரப்பதிவு அலுவலா்களும், இந்த அரசாணைப்படி செயல்பட பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி, வேலூா் வேலப்பாடியில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் பத்மபிரியா பெண்களுக்கு பத்திர பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தாா்.