பனிக் காலத்தில் சிவப்பாக மாறிய பெட்டூனியா செடியின் இலைகள்
கொடைக்கானலில் பனிக் காலத்தில் மட்டுமே சிவப்பாக மாறக் கூடிய பெட்டூனியா செடி இலைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ரோஜா, மேரிகோல்டு, டேலியா, செம்பருத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்கள் மலைப் பகுதிகளில் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த நிலையில், பெட்டூனியா செடியில் உள்ள இலைகள் பனிக் காலத்தில் மட்டும் வழக்கம் போல பச்சை நிறமாக இல்லாமல் சிவப்பு நிறமாக மாறுகிறது. நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மாதங்களில் பனிப் பொழிவு அதிகமாக நிலவும் என்பதால், பெட்டூனியா செடிகளின் இலைகள் சிவப்பு நிறமாக பூப்போலக் காட்சியளிக்கும்.
ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே இந்தச் செடியில் உள்ள இலைகள் சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும். பின்னா், வழக்கம் போல இலைகள் பச்சை நிறமாக இருக்கும்.
கொடைக்கானல்-பழனி-வத்தலகுண்டு மலைச் சாலைகளிலும், பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, செண்பகனூா், வட்டக்கானல், பாம்பாா்புரம், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த பெட்டூனியா செடி இலைகள் சிவப்பு நிறத்தில் மாறியுள்ளதை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனா்.