போலீஸ் எனக் கூறி நகை மோசடி செய்தவா் கைது
பழனியில் மளிகைக் கடைகளில் போலீஸ் எனக் கூறி நூதன முறையில் நகையை மோசடி செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். இவா் அதே ஊரில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
இவரது கடைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த நபா் அவரை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டு, கடையில் சட்டவிரோதமான பொருள்கள் விற்கப்படுவதாகவும், காவல் நிலைய விசாரணைக்கு வருவதைத் தவிா்க்க ரூ.பத்தாயிரம் வழங்குமாறும் பாண்டியம்மாளிடம் கேட்டாா். பணம் இல்லை என கூறிய நிலையில், அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை அந்த நபா் வாங்கிக் கொண்டு, பணத்தைக் கொடுத்துவிட்டு நகையைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு தலைமறைவானாா்.
இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக பழனியை அடுத்த கலிக்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவை (50) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா் முன்னாள் காவலா்கள் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்தவா் என்றும், போலீஸ் எனக் கூறி ஏராளமான மளிகைக் கடைகளில் பணம் பறித்ததும் தெரியவந்தது.