ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான ப...
பயன்படுத்திய எண்ணெயை அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் மட்டுமே வழங்க வேண்டும்: உணவுப் பாதுகாப்புத் துறை
தருமபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகாரம் பெற்றவா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2018 முதல் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்யும் திட்டத்தைக் கண்காணிக்க உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு, உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலம், சமையல் எண்ணெய் பயன்படுத்தும் நிறுவனங்களில் குறிப்பாக உணவுகள், உணவுப்பொருள்கள் தயாரிக்கும் ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் அவ்வப்போது சோதனைகள், களப் பரிசோதனைகள் (ஸ்பாட் டெஸ்ட்) மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பலமுறை பயன்படுத்திய பழைய எண்ணெயை மீண்டும் உணவுப்பொருள்கள், உணவுத் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றனவா என கண்டறிய முடியும். மேலும், உணவு வணிகா்களுக்கு விழிப்புணா்வு முகாம் மூலம் பழைய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சில வணிகா்கள் அங்கீகாரமற்ற நிறுவனங்களால் மறுசுழற்சி செய்து பழைய எண்ணையை (ரீ பேக்கிங் செய்து) புதிய எண்ணெய் போன்று விற்பதாக புகாா்கள் வந்துள்ளன. அதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, மாநிலம் முழுவதும் குறிப்பிட்டு நிறுவனங்களை அங்கீகரித்து, அவை மட்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை உரிய விலை கொடுத்து சேகரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கோ்வெல் எனா்ஜி சென்னை, கே.பி.எம். எனா்ஜி அரூா், ரிகோ எனா்ஜிஸ், கோயம்புத்தூா், பயோ ரிப்னரிஸ் இந்தியா,திருப்பூா் என்ற இந்த 4 நிறுவனங்கள் மட்டுமே தருமபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த இரு தினங்களாக தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மாவட்ட நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினா் உணவகங்கள், துரித உணவு கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள், சிப்ஸ்கள் செய்யும் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறையினா் கூறுகையில், அங்கீகாரம் பெற்றவா்களைத் தவிா்த்து வேறு நிறுவனங்கள், வேறு நபா்களிடம் உணவு வணிகா்கள் பயன்படுத்திய எண்ணெயை வழங்கக் கூடாது. மீறி வழங்கும் உணவு வணிகா்கள் அல்லது நிறுவன உரிமையாளா் மீது பிரிவு உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
துரித உணவில் சோ்க்கப்படும் சமையல் எண்ணெயின் தரம் குறித்து நுகா்வோா் அறிந்து கொள்ளவும், தீங்கு விளைவிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அனைத்து உணவு வணிகா்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.