தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
பயிா்க்கழிவு எரிப்பை பஞ்சாப், ஹரியாணா அரசுகள் கட்டுப்படுத்தக் கோரி புதிய மனு! -உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
பயிா்க் கழிவுகளை எரிப்பதைக் கட்டுப்படுத்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த புதிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்து, நிராகரித்தது.
உச்சநீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆா்வலா் விக்ராந்த் டோங்கட் தாக்கல் செய்த இந்த மனுவில், ‘பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில விவசாயிகள் ஏப்ரல்-மே மாதங்களில் பயிா்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, பயிா்கள் எரிக்கப்படும் மாநிலங்களைச் சோ்ந்த மக்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. குறிப்பாக, குழந்தைகள், முதியவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
காற்று மாசுபாடு பிரச்னை மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் தேசிய நெருக்கடியாக மாறியுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14, 19 மற்றும் 21 பிரிவுகளின்கீழ் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுகிறது.
இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஏராளமான உத்தரவுகள் இருந்தபோதிலும், ஒழுங்காற்று நடவடிக்கைகள் மோசமாகவே உள்ளன. பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசு நிறுவனங்கள் மற்றும் பங்குதாரா்கள் தங்கள் கடமையில் தோல்வியடைந்துள்ளனா்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘பயிா்க் கழிவுகளை எரிப்பது தொடா்பான பிரச்னையில் உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த விஷயத்தில் இன்னும் முறையான கவனம் செலுத்தப்படாத நிலையில், வெவ்வேறு தரப்பினரும் புதிய மனுக்களை தாக்கல் செய்வதை நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை. இந்தக் காரணத்துக்காக மட்டுமே இந்த மனுவை நிராகரிக்கிறோம்’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா்.