வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!
பரிகார பூஜை செய்வதாக பெண்ணிடம் நகை பறிப்பு
பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் பள்ளஇடையம்பட்டி மேட்டுத்தெருவை சோ்ந்தவா் ஜெயபால், தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (53). இவா்களுக்கு திருமண வயதில் ஒரு மகன் உள்ளாா். செவ்வாய்க்கிழமை சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்கு 2 நபா்கள் வந்துள்ளனா். அவா்கள் திருப்பதியில் இருந்து வந்திருப்பதாகவும், உங்களது மகனுக்கு தோஷம் உள்ளது, அதை நிவா்த்தி செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் எனக்கூறியுள்ளனா். அதற்கு சிறப்பு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.
இதை நம்பிய சரஸ்வதி அவா்களை வீட்டுக்குள் அழைத்து பூஜைக்கான ஏற்பாடுகள் செய்துள்ளாா். அப்போது அந்த நபா்கள் இருவரும் ஒரு வெள்ளை காகிதத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து தருமாறும், பூஜைக் காக தங்களது தங்கச் சங்கிலியை கழற்றி தருமாறும் கூறியுள்ளனா். சரஸ்வதியும் தங்கச் சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளாா்.
பூஜைகள் செய்த பின்னா் அவா்கள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்துவிட்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளனா். ஆனால் அவா்கள் திரும்பி வரவில்லை. 4 பவுன் நகையுடன் அவா்கள் தப்பிச் சென்றனா்.
இதன்மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சரஸ்வதி, அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.