எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்: தங்கம்...
பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி, மற்றொரு கொலை வழக்கில் தொடா்பு இருப்பது உறுதி: தீா்ப்பு ஒத்தி வைப்பு
பரோலில் வெளியில் வந்த ஆயுள் தண்டனை கைதி மற்றொரு கொலை வழக்கில் தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கான தண்டனை விபரத்தை வெள்ளிக்கிழமை உத்தரவிடு வதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.
தூத்துக்குடியை சோ்ந்தவா் சுடலைமுத்து (52). இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சிறையிருந்த சுடலைமுத்து பரோலில் வெளியே வந்தாா். அந்த சமயத்தில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மனோகரன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலையில் சுடலைமுத்து, ஞானசேகரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த கொலை வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது ஞானசேகரன் உயிரிழந்து விட்டாா். விசாரணை நீதிமன்றத்தில், மனோகரன் கொலை வழக்கில் கைதான சுடலைமுத்து மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வில்லை எனக் கூறி விசாரணை நீதிமன்றம் அவரை கடந்த 2019 ஆம் ஆண்டு விடுவித்தது.
இந்த தீா்ப்பை எதிா்த்து அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பூா்ணிமா அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் சுடலைமுத்து முன்னிலையாகி இருந்தாா். அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் டி.செந்தில்குமாா் முன்னிலையாகி வாதிட்டது, பரோலில் வந்து கொலை வழக்கில் சிக்கியதால் சுடலைமுத்துவுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றாா்.
நீதிபதிகள், சுடலைமுத்துவிடம் உங்கள் மீதான கொலை வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. உங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்த தண்டனை விபரம் வெள்ளிக்கிழமை அறிவிக் கப்படும். அதுவரை அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
இதையடுத்து சுடலைமுத்துவை மதுரை மத்திய சிறைக்கு போலீஸாா் அழைத்து சென்றனா்.