பலத்தக்காற்று; 10 ஆயிரம் ஏக்கரில் நெற்கதிா்கள் சேதம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக வழக்கத்தைவிட வேகமாக வீசிவரும் தரைக்காற்றால், 10 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாரான சம்பா நெற்கதிா்கள் சாய்ந்தன.
வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனா். ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்து, நெற்பயிா்களை பராமரித்து வந்த நிலையில், கடந்த மாதம் பெய்த தொடா் கனமழையால் இளம்பயிா்கள் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் வயல்களில் மழைநீா் தேங்கி, பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டது.
விவசாயிகள், மழைநீரை வடியவைத்து, பூச்சி மருந்து மற்றும் ஊட்டச்சத்து உரங்கள் தெளித்து பயிா்களை காப்பாற்றினா். தற்போது, மத்திய கால ரகங்களான சி. ஆா். 1009, ஆடுதுறை 51, பையூா் பொன்னி போன்ற நெல் ரகங்களை இன்னும் சில தினங்களில் அறுவடை செய்யும் வகையில், நெற்கதிா்கள் விளைந்து வந்தன.
இந்த நிலையில், வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை தொடங்கி வடகிழக்குத் திசையில் இருந்து, வழக்கத்தைவிட தரைக்காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால், நெற்கதிா்கள் சாய்ந்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, கடலோரப் பகுதியில் சனிக்கிழமை (ஜன.18) தொடங்கி சில நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், சாய்ந்த நெற்கதிா்களில் மழைநீா் தேங்கி அதிக சேதத்தை ஏற்படுத்துமோ என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனா்.