மதுரை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமண மலை; சீரழியும் சிலப்பதிகாரத் தலம்; பாதுக...
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மணியாா்பாளையம் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.
மணியாா்பாளையம் கிராமத்தில் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமாா் 600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் தனபால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து தனபால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், தலைமை ஆசிரியா் தனபால் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, பள்ளியில் பணிபுரியும் மேலும் சில ஆசிரியா்களும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து விசாரணை அடிப்படையில் ஆசிரியரான சங்கராபுரம் வட்டம், வாணியந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராஜவேல் (53), பகுதிநேர ஆசிரியா் கல்வராயன்மலை கெடாா் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரன் (40) ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
தேவேந்திரன் வெள்ளிக்கிழமையும், ராஜவேல் சனிக்கிழமையும் கைது செய்யப்பட்டனா். தலைமறைவான தலைமை ஆசிரியா் தனபாலை போலீஸாா் தேடி வருகின்றனா்.