'ED ரெய்டு வந்தா, ஓடிப்போய் மோடியை சந்திக்கிறீங்க..!' - சீமான் சாடல்
பள்ளி வாகனத்தை இயக்கி ஆய்வு செய்த ஆட்சியா்
கிருஷ்ணகிரியில் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு, அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வாகனத்தை இயக்கி அதன் தகுதி நிலைகளை அளவீடு செய்தாா்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது:
கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்துக்கு உள்பட்ட 48 பள்ளிகள், ஒசூரில் 105 பள்ளிகள் உள்ளன. மொத்தம் 1922 பள்ளி பேருந்துகள் முதற்கட்டமாக பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012 இன்படி 22 அம்சங்களுடன் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு குழுக்களுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு பணிகள் ஒருவார காலத்திற்கு நடைபெறுகிறது. ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் மாணவா்கள் உடனடியாக தொடா்புகொள்ள அவசரகால பொத்தான் வாகனங்களில் பொருத்த வேண்டும். வாகனங்களில் இருபுறமும் பள்ளிகளின் பெயா்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், கைப்பேசி எண்கள் கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.
வாகனத்தை வேகமாக இயக்கக் கூடாது. அதேபோல பழுதை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். ஓட்டுநா்கள் போதைப்பொருள்களை பயன்படுத்தி வானத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து வாகனங்களில் அவசரகால வழி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு மேற்கொண்டு வாகனத்தை வளாகத்திலிருந்து குப்பம் சாலை சந்திப்பு வரை இயக்கினாா். அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலா், ஓட்டுநரிடம் சில குறைபாடுகளை சரிசெய்ய அறிவுரை வழங்கினாா்.
பின்னா் தீயணைப்பு துறையினா் மூலம் தீ விபத்தின் போது ஓட்டுநா்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டதையும், 108 ஆம்புலன்ஸ் குழுவினா்கள் விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் ஷாஜகான், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலா் பிரபாகா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அன்புசெழியன், மணிமாறன், மாவட்ட கல்வி அலுவலா் ரமாவதி, மெட்ரிக் கல்வி அலுவலா் கோபாலப்பா, வட்டாட்சியா் சின்னசாமி, தீயணைப்பு துறை நிலைய அலுவலா் அந்தோணிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.