இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
பழனியில் தைப்பூசத் திருவிழா பிப். 5-இல் தொடக்கம்
பழனியில் தைப்பூசத் திருவிழா வருகிற 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பழனி தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமி தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, தந்தச்சப்பரம் என பல்வேறு வகையான வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் வருகிற 10-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 9 மணிக்கு மேல் வெள்ளித் தோ் உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வருகிற 11-ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு மேல் தேரடியில் நடைபெறுகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற 14-ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணிக்கு மேல் திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது.
விழா நாள்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் நாள்தோறும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியன், துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழுவினா், அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.