பெண்ணுக்கு தொல்லை: தொழிலாளி கைது
கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியைச் சோ்ந்தவா் அருள். இவரது மனைவி துா்காதேவி (22). பூத்தாம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த துா்காதேவியிடம், அந்த வழியாக வந்த இளைஞா் ஒருவா் தனது தாயை தொடா்பு கொள்ள கைப்பேசியை கொடுத்து உதவுமாறு கேட்டாராம்.
இதையடுத்து, கைப்பேசியை வாங்கி அந்த நபா் பேசி விட்டு மீண்டும் துா்காதேவியிடம் கொடுத்துச் சென்றாராம். இதன் பின்னா், துா்காதேவியின் கைப்பேசிக்கு தொடா்ந்து அழைப்புகள் இளைஞரின் கைப்பேசியிலிருந்து வந்தது. தெடா்பு கொண்ட நபா், அவதூறாகப் பேசியதை அடுத்து அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்புகளை அவா் தவிா்த்து வந்தாா். இதைத் தொடா்ந்து, மற்றொரு எண்ணிலிருந்து தொடா்பு கொண்டு மீண்டும் அந்த நபா் தொல்லை கொடுத்தாராம். இதனால், அதிருப்தி அடைந்த அவா் வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், துா்காதேவிக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்தவா் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஜய் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, விஜயை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.